தெரியுமா உங்களுக்கு?

1. இணைய இணைப்பின் வேகம்  8Mb/secஎன்று சொன்னால், அது வினாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.
2.“Start Me Up” என்ற புகழ் பெற்ற ஆங்கில இசைப்பாடல் விண்டோஸ் 95 தொகுப்பின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது.
3. பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது பிளாஷ் ட்ரைவ் இருக்க வேண்டும்.
4. அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது.
5. உங்கள் லேப்டாப் மீது தண்ணீர், காப்பி,டீ, கூல் ட்ரிங்க்ஸ் என ஏதாவது திரவும் கொட்டிவிட்டால், உடனே மின்சக்தி வரும் ப்ளக்கினை எடுத்து மின்சக்தியை நிறுத்தவும். அல்லது பேட்டரியினை வெளியே இழுக்கவும்.
6. லேப்டாப்பின் பேட்டரி திறனை நீண்ட நாள் பாதுகாப்பாகப் பெற, திரையின் வெளிச்சத்தைக் குறைப்பது நல்லது.
7. கம்ப்யூட்டர் கேம்ஸ்களில், மிக அதிகமாக விற்பனை செய்யப்பட்டது The Sims  என்ற கேம்.
8. உங்களையும் அறியாமல், உங்களிடம் உள்ள ஒரே நகல் உள்ள ஒரு கோப்பினைக் கம்ப்யூட்டரிலிருந்து அழித்துவிட்டால், உடனே ரெகுவா போன்ற, கோப்பு மீட்டுத் தரும் அப்ளிகேஷன் புரோகிராமினைப் பயன்படுத்த வேண்டும். எனவே இதனை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைப்பது நல்லது.
9.ஒரு பிரிண்டரை வெகுநாள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நீங்கள் திட்டமிட்டால், பிரிண்டரை வாங்கும் முன், ஒரு பக்கம் அதில் அச்சடிக்க எவ்வளவு செலவாகும் என்பதனையும்  கணக்கிட்டுப் பார்க்கவும்.
10. “Hotswapping” என்பது, கம்ப்யூட்டருடன் ஒரு சாதனைத்தை இணைத்துப் பயன்படுத்திய பின்னர், கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடாமல் அல்லது ரீபூட் செய்திடாமல், இணைப்பை நீக்குவதனைக் குறிக்கும்.
11. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பின், சிஸ்டம் முடங்கினாலோ, மிக மெதுவாக இயங்கினாலோ, உடனே சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட் மூலம், அந்த அப்ளிகேஷன் பதிந்த நாளுக்கு முன்னர் இருந்த நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வருவதுதான் சிறந்த வழியாகும்.
12. ஒரு பிழைச் செய்தியைக் காட்டிய பின்னர், கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், அதற்கான தொழில் நுட்ப வல்லுனரை அழைக்கும் முன், அந்த பிழைச் செய்தி என்ன என்று குறித்து வைத்துக் கொள்வது சிறந்த வழி முறையாகும்.  முடியுமானால், அதனை செலக்ட் செய்து காப்பி செய்து, ஒரு டெக்ஸ்ட் பைலில் பேஸ்ட் செய்திடலாம்.  இயலாவிட்டால், அதனைப் பார்த்து எழுதிக் கொள்ளலாம். அதுவும் முடியாவிட்டால், அப்படியே அந்த பிழைச் செய்திக்கான திரையை, ஒரு இமேஜாக சேவ் செய்து, பின்னர் அதனைத் திறந்து அதில் இருப்பதைப் பார்த்து, டெக்ஸ்ட்  பைலாக சேவ் செய்து வைக்கலாம்.
13.  FAT16, FAT32, மற்றும் NTFS ஆகியவை வெவ்வேறு வகையான பைல் கட்டமைப்புகளாகும்.
14. விண்டோஸ் என்.டி. (Windows NT)  யில் உள்ள என். டி. என்பது New Technology  என்ற சொற்களைக் குறிக்கிறது.
15. 1977 ஆம் ஆண்டு,பில் கேட்ஸ் ஒருமுறை, மிக வேகமாகக் காரை ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்.
16. விண்டோஸ் எக்ஸ்பியின் திரைத் தோற்றத்தில் மாற்றப்படா நிலையில் மிகப் பெரிய பச்சைப் புல்வெளி மேடும், பின்னணியில் மலையும் உள்ளதல்லவா? இதனை விண்டோஸ் பிளிஸ் (Bliss)  எனப் பெயரிட்டுள்ளது. இந்த அழகான காட்சியைப் போட்டோவாக எடுத்தவர் பெயர் சார்ல்ஸ் ஓ ரியர்  (Charles O’Rear). கலிபோர்னியாவில் சொனாமா கவுண்ட்டி என்ற இடத்தில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. இதனைப் பின்னர் மைக்ரோசாப்ட் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, தன் எக்ஸ்பி சிஸ்டத்தில் மாறா நிலையில் உள்ள டெஸ்க்டாப் இமேஜாகப் பயன்படுத்தியது.

இலவச எழுத்துக்கள் தரும் இணைய தளங்கள்

நீங்கள் கம்ப்யூட்டரில் பணிபுரியும் டிசைனர் என்றால் நிச்சயமாக உங்கள் வேர்ட் ப்ராசசர், டி.டி.பி. சாப்ட்வேர் மற்றும் பிற தளங்கள் தரும் எழுத்து வகைகள், உங்கள் கற்பனைத் திறனுக்கு ஈடு கொடுக்க முடியாது.  ஆனால் இணையத்தில் இலவசமாக எழுத்து வகைகளைத் தரும் தளங்கள் நிறைய உள்ளன. ஒரு சில தளங்களில் கட்டணம் செலுத்தியே சில எழுத்துவகைகளைப் பெற முடியும். பெரும்பாலான தளங்கள் விண்டோஸ் சிஸ்டத்துடன் மற்ற  மேக் மற்றும் லினக்ஸ் தளங்களில் பயன்படுத்தும் எழுத்துவகைகளையும்  தருகின்றன.  இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1.www.fawnt.com :  இந்த தளம் 9348 எழுத்து வகைகளுக்கான கோப்புகளைக் கொண்டுள்ளது. டிசைனர், டெவலப்பர்கள் மற்றும் இணையப் பக்கங்கள் அழகாக அமைய வேண்டும் என விரும்புபவர்கள் இந்த தளம் சென்று எழுத்து வகைகளைப் பெறலாம்.
2.www.abstractfonts.com :  இதில் 11,849 எழுத்து கோப்புகள் உள்ளன. நம் தேவைக்கேற்ப எழுத்து வகைகளைத் தேடுவதற்கு நல்ல யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது.
3. www.freefonts.co.in : இந்திய இணைய தளம். இதில் 12,000க்கு மேற்பட்ட எழுத்துவகைக் கோப்புகள், அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் தரப்பட்டுள்ளன.
4. www.dafont.com :  இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்துவகைகள் கிடைக்கின்றன. அனைத்தும் இலவசமே. எளிதாகத் தேடி அறிந்து எடுத்துக் கொள்ள சிறப்பாக வழி காட்டும் மெனு உள்ளது.
5. : ஏறத்தாழ 8,000 எழுத்து வகைக் கோப்புகளுக்கும் மேலாக இதில் கிடைக்கின்றன. அனைத்தும் சரியான முறையில் பிரித்து வைத்துக் காட்டப்படுகின்றன. அகரவரிசைப்படியும் இவற்றை பிரவுஸ் செய்து தேர்ந்தெடுத்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
6. www.free–fonts.Com : இது 3ல் காட்டப்பட்டுள்ள தளம் அல்ல. முகவரியினை நன்கு கவனிக்கவும். இது எழுத்துவகை கோப்புகளுக்கு ஒரு தேடல் சாதனம் போலச் செயல்படுகிறது. இதன் தகவல் கிடங்கில் 55 ஆயிரம் எழுத்துவகைகளுக்கு மேல் காட்டப்படுகிறது. ஆனால் பிரவுஸ் செய்து பெற முடியவில்லை. எழுத்து வகையின் பெயரை நினைவில் வைத்துத் தேட வேண்டும்.
7.http://simplythebest.net/fonts/: ஆயிரக்கணக்கில் எழுத்துவகை கோப்புகளைக் கொண்டு, அவற்றைத் தரம் மற்றும் வகை பிரித்துக் காட்டுகிறது. ஒவ்வொரு எழுத்துவகையும் இலவசமா இல்லையா என்று முதலிலேயே காட்டப்படுகிறது.  மேலே கூறப்பட்ட தளங்களிலிருந்து எழுத்து வகைக்கான கோப்புகளை இறக்கி, அவை சுருக்கப்பட்ட ஸிப் பைல்களாக இருந்தால், அவற்றை விரித்துப் பின் பாண்ட்ஸ் போல்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

திரையில் கீ போர்ட்

பல வேளைகளில் கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்டுள்ள கீ போர்டில் டைப் செய்வது ஆபத்தில் முடிகிறது. நீங்கள் என்ன டைப் செய்கிறீர்கள் என்பதனை, நீங்கள் அழுத்தும் கீகளை வரிசையாகப் பெற்று அறிவிக்கும் கீ லாக்கர்கள் புரோகிராம் கள், இணையத்தில் நிறைய கிடைக் கின்றன. இதனைக் கம்ப்யூட்டர்களில் பதிந்து வைத்தால், ஒருவர் டைப் செய்திடும் இமெயில் முகவரி, பாஸ்வேர்ட், வங்கி அக்கவுண்ட் தகவல்களைப் பெற்று, திருட்டுத் தனமாக அவற்றைப் பயன்படுத்த முடியும். மேலும் பல ஸ்பைவேர் புரோகிராம்கள் இது போல கீ போர்டில் அழுத்தப்படும் கீகளை அறியும் நோக்கத்துடனேயே தயார் செய்யப் பட்டு, நம்மை அறியாமலேயே நம் கம்ப்யூட்டர்களில் பதிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் நம் தகவல்களை அந்த புரோகிராம்கள் அனுப்பி யவர்களின் கம்ப்யூட்டருக்குச் செல்லும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. என்னதான் நாம் ஆண்ட்டி வைரஸ், பயர்வால், ஸ்பைவேர் புரோகிராம்களை பதித்து வைத்து இயக்கினாலும், அவற்றையும் மீறிக் கொண்டு இந்த ஸ்பைவேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டருக்குள் நுழைகின்றன.
இதனால் தான் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் ரகசிய தகவல்களைக் கையாளும் அமைப்புகள், தங்கள் தளங்களிலேயே விர்ச்சுவல் கீ போர்டு ஒன்றைத் திரையில் தருகின்றன. இந்த விர்ச்சுவல் கீ போர்டு மூலம் நம் யூசர் நேம், பாஸ்வேர்ட் மற்றும் பிறர் அறியக்கூடாத தகவல்களை டைப் செய்திடலாம். இவற்றின் மூலம் டைப் செய்திடுகையில், மேலே குறிப்பிட்ட ஸ்பைவேர் புரோகிராம்கள், கீ அழுத்தங்களைப் பின்பற்ற முடியாது.   அப்படி எனில், நமக்கு நிரந்தரமாக ஒரு விர்ச்சுவல் கீ போர்டினை வைத்துக் கொள்ள முடியுமா என்று நாம் எதிர்பார்க்கலாம்.  அப்படி ஒரு விர்ச்சுவல் கீ போர்ட், யூசர் ஸ்கிரிப்ட் விர்ச்சுவல் கீ போர்ட் (UserScript Virtual Keyboard) என்ற  பெயரில் கிடைக்கிறது. திரையில் வைத்து இதனை மிக வேகமாகவும் எளிதாகவும் இயக்க முடிகிறது. தற்போதைக்கு டெக்ஸ்ட் பீல்ட், பாஸ்வேர்ட் பீல்ட், சார்ந்த டெக்ஸ்ட் ஏரியா ஆகியவற்றில் இதன் மூலம் சொற்களை அமைக்க முடிகிறது. பிரவுசர்களில் முகவரிகளை இதனைக் கொண்டு அமைக்க முடியாது. இதனை பதிந்துவிட்டு, இணைய தளம் ஒன்றில் மேலே குறிப்பிட்ட பீல்டுகளில் கர்சரைக் கொண்டு சென்று மூன்று முறை கிளிக் செய்தால், இந்த விர்ச்சுவல் கீ  போர்டு கிடைக்கிறது.  டெக்ஸ்ட் பீல்டுக்குக் கீழாகவே இது காட்டப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி அல்லது ஜப்பானியர்கள் பயன்படுத்தும் வெவ்வேறு கீ போர்டுகளின் வடிவமைப்புகள் இதில் கிடைக்கின்றன. தேவையானதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் இது இயங்குகிறது.    இதனைப் பெற http://userscripts.org/scripts/show/10974 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.